வீட்டில் பணம் பெருக என்ன செய்ய வேண்டும்?
தனிமனித நிதியில் அடிப்படையில் இரண்டு விஷயங்கள் உள்ளன. இந்த இரண்டையும் சரியாக செய்வது, வீட்டில் பணம் பெருகுவதற்கான அஸ்திவாரம்.
1. பணத்தின் வரவு - எவ்வளவு அதிகரிக்க முடியுமோ, அதிகரிக்க வேண்டும்.
அதிக பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக,
- அதிக சம்பளம் கிடைக்கும் மற்றொரு வேலைக்கு மாறுவது
- வேலைபார்க்கும் நிறுவனத்திலேயே பணி உயர்வு பெறுவது
- வீட்டில், கணவன், மனைவி என இருவரும் வேலைபார்ப்பது
- பகுதி நேரத்தில் மற்றொரு வேலை பார்ப்பது
- ஈடுபாடு அற்ற வருமானம் (passive income) சம்பாதிக்கப் பார்ப்பது
2. பணத்தின் செலவு - எவ்வளவு குறைக்க முடியுமோ, குறைக்க வேண்டும்.
சிக்கனமாக வாழ்வதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. உதாரணமாக,
- வெளியில் உணவருந்துவதைத் தவிர்ப்பது
- திட்டமிட்டு செலவழிப்பது(Budget)
- தேவையற்ற மாதாந்திர சந்தாக்களிலிருந்து வெளியேறுவது
- முடிந்த அளவு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது
- முடிந்த அளவு இரண்டாம் நபர்(second hand) பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குவது
- பொருட்களை கழிவு விலையில் வாங்குவது
இவற்றில், முதலாவதை விட, இரண்டாவது எளிது. ஏனென்றால், ஏற்கனவே, சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். சிக்கனமாக வாழ்வதன் மூலம், அதிகமாக பணத்தை சேமிக்க முடியும்.
ஆனால், இவற்றிற்கு மேலாக, மூன்றாவது ஒன்று முக்கியமானது.
3. நிதி திட்டமிடல் - நிதியை திட்டமிட்டு மேலாண்மை செய்வது. . இதுதான் அஸ்திவாரத்திற்கு மேலே கட்டப்படும் வீடு போன்றது.
நன்றி;
- அவசர கால நிதி வைத்திருப்பது - குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்களுக்கான செலவை அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம், அவசரத் தேவைகளுக்கு கடன் வாங்குவதை தவிர்க்க முடியும்.
- கடன்கள் இல்லாமலிருப்பது - கடன்களை அடைத்துவிட வேண்டும். கடன்களை வைத்திருந்து பணம் சேர்ப்பது, ஓட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் சேர்ப்பதைப் போன்றது.
- காப்பீடு - சேர்த்தப் பணத்தை பாதுகாப்பது. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு போன்றவை, சேர்த்தப் பணமானது விரயமாகமல், நமக்கு உதவும்.
- முதலீடு - சேர்த்தப் பணத்தைப் பெருக்குவது - முதலீட்டின் மூலம் பணவீக்கத்தை சமாளிக்க முடியும். குறிக்கோளுக்கு ஏற்ற முதலீட்டினை வைத்திருக்க வேண்டும்.
- ஈகை - ஈகை செய்வதன் மூலம், சமுதாயத்திற்கான பங்கினை செலுத்த முடியும். சமுதாயக் கடனை செலுத்துவது, நம்மைப் பற்றிய நமது சுயமதிப்பைக் கூட்டும். அது வாழ்வின் எல்லா பகுதிகளிலும், நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
உங்களது வீட்டில் பணம் பெருக வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment